Posted in

வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பண்பாட்டைப் பேணவும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இனி வாரத்தில் ஒரு நாள் தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் வேட்டி, சட்டை மற்றும் சேலை போன்ற பாரம்பரிய மரபு ஆடைகளை அணியும் முறை நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது அறிவிப்பாக, தலைமைச் செயலகத்தில் புதிதாகத் ‘தமிழ்ச்சங்கம்’ அமைக்கப்பட்டு, ஏற்கனவே இயங்கி வரும் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும், அதன் தலைவராக முதலமைச்சரே செயல்படுவார் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், உலகெங்கிலும் வாழும் தமிழ் அமைப்புகளின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, விரைவில் தனி அதிகாரிகளை நியமித்து உலகத் தமிழ் மாநாடு மீண்டும் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கைத்தறி மற்றும் காதி கிராஃப்ட் நெசவாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய ஆதரவாக அமையும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் வளர்ச்சித்துறையின் இந்த அறிவிப்புகளுக்கு அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய ஆடை அணிவது தமிழ் பண்பாட்டுத் தொடர்பைப் பேண உதவுவதுடன் நெசவுத் தொழிலுக்கும் புதிய புத்துயிரளிக்கும் எனக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை தயாரித்து வருகிறது.

அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியானதும், அனைத்து அரசுத் துறைகளிலும் மரபு ஆடை தினம் முறைப்படி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.