Posted in

துரைமுருகன் பேத்தி திருமணத்தில் புரோகித முறை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம்!

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும், வேலூர் எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், திமுகவின் சுயமரியாதை மரபுகளை மீறிப் புரோகிதர்கள் மூலமாகச் சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறையில் சடங்குகள் நடத்தப்பட்டன. பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் படங்களை அழைப்பிதழில் அச்சிட்டுவிட்டு, வைதீக முறையில் திருமணம் நடத்தியது கொள்கைக்கு முரணானது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

சுயமரியாதைத் திருமணத்திற்குப் பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், கட்சியின் இரண்டாம் இடத்தில் உள்ள பொதுச்செயலாளரே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது அறிவு நாணயமற்ற செயல் என்று கி.வீரமணி சாடியுள்ளார். மேலும், திமுக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார், தமிழறிஞர் பொழிலன் மற்றும் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டப் பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களும் இச்சம்பவத்திற்குத் தங்களது கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர். இதுபோன்று எதிரிகளுக்கு வாய்ப்பளிக்கும் இரட்டை நிலைப்பாட்டு நடவடிக்கைகளை இனி தொடரா வண்ணம் திமுக தலைமை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் திராவிட மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தற்போது வரை இந்த விமர்சனங்கள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தரப்பிலிருந்தோ அல்லது திமுக தலைமையிலிருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் இதுபோன்ற கட்சி கொள்கை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க திமுக தலைமை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் உற்றுநோக்கப்படுகிறது.