அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அணுஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ராணுவப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரானின் அரசு நடத்தும் ஐஆர்என்ஏ (IRNA) செய்தி நிறுவனம் சார்பில் 8 நிமிடங்கள் கொண்ட சிறப்பு விழிப்புணர்வு ஆடியோ மற்றும் வீடியோ வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அணு வெடிப்பு அல்லது கதிர்வீச்சுத் தாக்குதல் நிகழும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அதில் விளக்கப்பட்டுள்ளன.
ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி மையம் அமைந்துள்ள இஸ்ஃபஹான் மாகாணத்தின் அவசரகால பாதுகாப்புத் துறை இந்த வீடியோவை தயாரித்துள்ளது. அணு வெடிப்பு ஏற்படும் போது ஜன்னல் அல்லது கட்டடங்களின் வெளிப்புறப் பகுதிக்குச் செல்லாமல் பூமிக்கு அடியில் உள்ள அடித்தளங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்றும், குறைந்தது 24 மணி நேரம் மூடப்பட்ட அறைகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கதிர்வீச்சு கலந்த காற்று உள்ளே வராமல் தடுக்க ஏசி எஞ்சின்களை உடனடியாக அணைக்கவும், அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் ஈரான் அரசு முதன்முறையாக அணுஆயுதத் தாக்குதல் தற்காப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஈரானின் ஆண்டு ‘செயலற்ற தற்காப்பு வாரத்தை’ (Passive Defence Week) முன்னிட்டே இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈரான் அரசு தனது நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி மையங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த ராணுவப் பதற்றம் குறித்து உலக நாடுகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.