உலகின் மிகப்பெரிய ஒற்றைத் தட்டு ரேடியோ தொலைநோக்கியான சீனாவின் ‘ஃபாஸ்ட்’ (FAST) மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை வானியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, விண்வெளியில் இருந்து வந்த விசித்திரமான ரேடியோ சிக்னலை அடையாளம் கண்டுள்ளனர். பூமியிலிருந்து சுமார் 238 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள K2-155 என்ற நட்சத்திர அமைப்பில் உள்ள சூப்பர்-எர்த் கோளின் திசையிலிருந்து இந்த சிக்னல் வந்துள்ளது. ‘NBS 260108’ எனக் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிக்னல், ஒரே அதிர்வெண்ணில் குவிந்த நிலையான ரேடியோ தொனியாகப் பதிவாகியுள்ளது.
இயற்கை நிகழ்வுகளால் உருவாக்க முடியாத குறுகிய அலைவரிசை மற்றும் அதிர்வெண் மாற்றம் (Drift) உள்ளிட்ட பண்புகளைக் கொண்டுள்ளதால், இது செயற்கையாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப சமிக்ஞையாக இருக்கலாம் என ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைநோக்கியின் 19 கற்றைகளில் K2-155 அமைப்பைக் இலக்கு வைத்த கற்றையில் மட்டுமே இந்த ரேடியோ அலைகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இது பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ரேடியோ குறுக்கீடாக (Terrestrial Interference) இருக்கவும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ‘தி அஸ்ட்ரானமிக்கல் ஜர்னல்’ (The Astronomical Journal) இதழில் விரிவான ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வேற்றுக்கிரக நுண்ணறிவு உயிரினங்களைத் தேடும் முயற்சியில் (SETI) இந்த சிக்னல் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ள போதிலும், கூடுதல் ஆதாரங்கள் இல்லாமல் இதை வேற்றுக்கிரகவாசிகளின் சமிக்ஞை என உறுதியாகக் கூற முடியாது என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபாஸ்ட் தொலைநோக்கியின் பிற கற்றை பதிவுகளை ஒப்பிட்டு, இந்த சிக்னலின் துல்லியமான இருப்பிடம் மற்றும் இயக்கம் குறித்துத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப மேம்ப்பாடுகள் மற்றும் கூடுதல் கண்காணிப்புகள் மூலமே இது விண்வெளியின் உண்மையான சமிக்ஞையா அல்லது பூமிசார் குறுக்கீடா என்பது இறுதியில் உறுதி செய்யப்படும்.