துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அஃபியோன்கராஹிசார் (Afyonkarahisar) மாகாணத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில், காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சாலையில் சென்ற வாகனங்களை மறித்துத் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் இரு ஆசிரியர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
துருக்கியின் யுகாரிடாண்டிர், கியிர் மற்றும் அயாசினி ஆகிய மூன்று கிராமப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு வாகனங்களில் இருந்தவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பிறகுத் தப்பியோடிய சந்தேகநபரின் சிவப்பு நிறக் காரை எஸ்கிசெஹிர் மாகாணத்தில் சேற்றில் சிக்கிய நிலையில் காவல்துறையினர் மீட்டனர். அதே நாளில் ஒஸ்மான் காசி பகுதியில் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு அஃபியோன்கராஹிசார் மாகாண ஆளுநர் அலுவலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்த நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் குறித்துத் தெளிவான விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த கிராமப்புறச் சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் துருக்கி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபரை எஸ்கிசெஹிர் பகுதியில் வைத்துக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்தும், முந்தைய வழக்குடன் அவருக்குள்ள தொடர்பு குறித்தும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.