Posted in

ஜெம் வீரமணி உட்பட 3 பேர் குண்டர் சட்ட அறிவுரைக் கழகத்தில் ஆஜர்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி மீது 8 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி அவர்கள் மீது சென்னை பெருநகரக் காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. இந்த தடுப்புக் காவல் உத்தரவை ஆய்வு செய்வதற்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குண்டர் சட்ட அறிவுரைக் கழகத்தில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த அறிவுரைக் கழகத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டவர்களிடம் குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்தும், காவல்துறையின் குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கை செல்லுபடியாகுமா என்பது குறித்து அறிவுரைக் கழகம் முடிவெடுத்து அறிக்கை அளிக்கும்.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூவரையும் மீண்டும் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் சென்னை பெருநகரக் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.