Posted in

தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் மாமல்லபுரத்தில் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சரான விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக தவெகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைகளில் சிக்கிய சூழலில், பொதுவெளியில் கட்சியின் கண்ணியம் காத்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்துப் புதிய வழிகாட்டுதல்களை வழங்கிடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தவெக ஆட்சி அமைந்து 6 மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், சில எம்.எல்.ஏ-க்களிடம் மாற்றுக் கட்சியினர் பேரம் பேசுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மதுரையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து புகார் அளித்திருந்த பின்னணியில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் முக்கிய அரசியல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொகுதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இன்று காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்த ஆலோசனை கூட்டத்தின் நிறைவில், முதலமைச்சர் விஜய் தரப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.