திருச்சியில் காவல்துறையினரைக் கத்தியால் தாக்க முயன்ற பிரபல ரவுடி சிவநேசன் என்பவரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி சிவநேசன் என்பவரைப் பிடிப்பதற்குத் தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தலைமறைவாக இருந்த சிவநேசனைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது, அவர் காவல் துறையினரை நோக்கித் திடீரெனக் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர் தனது துப்பாக்கியால் சிவநேசனின் காலில் சுட்டு அவரைக் கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட சிவநேசன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் ஆயுதங்களுடன் உலாவுதல் உள்ளிட்ட பல்வேறு தீவிர குற்ற வழக்குகள் திருச்சி நகரின் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இச்சம்பவத்தின் போது காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த ரவுடி சிவநேசன் மற்றும் காயமடைந்த காவலர் ஆகிய இருவரும் சிகிச்சைக்காகத் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் திருச்சி மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முற்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.
தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடி சிவநேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், சிகிச்சை நிறைவடைந்த பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.