ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேட்டோ (NATO) படையில் பணியாற்றக் கூடிய 41 வயதான அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், ரஷ்ய நாட்டிற்கு ஆதரவாக உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் குளௌசெஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியில் வைத்து அவரை லண்டன் பெருநகரப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் கைது செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள வீரர், குளோசெஸ்டர்ஷையரின் இன்னஸ்வொர்த் பகுதியில் உள்ள நேட்டோவின் விரைவுப் பதில் படைகளின் தலைமையகத்தில் (Allied Rapid Reaction Corps) பணியாற்றி வந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ (FBI) இயக்குனர் காஷ் படேல் கருத்து தெரிவிக்கையில், உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய தீவிரமான விவகாரம் என்று கூறியுள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு செயலும் பொறுத்துக்கொள்ளப்படாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்தின் 2023 தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act 2023) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சந்தேகநபர், லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அவரது பின்னணி மற்றும் உளவுத் தகவல்கள் பரிமாற்றம் குறித்த விரிவான அறிக்கைகள் விரைவில் வெளியாகக்கூடும்.