Posted in

போர்க்களத்தில் காயம் அடைந்த சக வீரரை காப்பாற்ற மறுத்து சுட்டுக் கொன்ற ரஷ்ய வீரர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த தனது சக வீரரைச் சுட்டுக் கொல்லும் காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. உக்ரைன் ட்ரோன் அல்லது நிலக்கண்ணி தாக்குதலில் படுகாயமடைந்து நடக்க முடியாமல் தவித்த வீரருக்கு மருத்துவ உதவி செய்வதற்குப் பதிலாக, மற்றொரு ரஷ்ய வீரர் அவரைத் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனிதநேயமற்ற செயல் குறித்த காட்சிகள் உக்ரைன் ட்ரோன் கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவாகி சர்வதேச அளவில் பகிரப்பட்டுள்ளது.

முன்னதாக இத்தகைய காட்சிகள் உக்ரைன் தரப்பினரால் திட்டமிடப்பட்ட பொய் பிரச்சாரம் எனச் சில புதின ஆதரவு ஊடகங்கள் வாதிட்டன. எனினும், களம் இறங்கிய சுயாதீனப் பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச ஊடக விசாரணைகளில் தொடர்புடையவர்கள் அனைவரும் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான தாக்குதல்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாக வர முடியாத சூழ்நிலைகளைக் காரணம் காட்டி சக வீரர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

போர்க்களத்தில் படுகாயமடையும் வீரர்களைப் பாதுகாக்க வேண்டிய சக வீரர்களே அவர்களைக் கொல்வது இராணுவ ஒழுக்க நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானது என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. ரஷ்ய தரப்பில் இச்சம்பவம் குறித்து முறையான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், போர்ச்சூழலில் நிலவும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதுபோன்ற முரண்பாடான மற்றும் கடுமையான சம்பவங்கள் உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய படைகளுக்குள் நிலவும் உளவியல் அழுத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.