Posted in

வெற்றி வீடு திட்டம்: சொந்த நிலம் வைத்துள்ளோருக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் அரசு மானியம்!

தமிழ்நாட்டில் குடிசைகள் மற்றும் பாதுகாப்பற்ற தற்காலிக வீடுகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசு ‘வெற்றி வீடு திட்டம்’ (Vetri Veedu Thittam) என்ற புதிய ஊரக வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக நிலம் வைத்துள்ள பயனாளிகள் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ளத் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் 70,000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் தமிழகத்தின் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவராகவும், சொந்தமாக நிலம் அல்லது முறையான வீட்டுமனைப் பத்திரம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் தற்காலிகக் குடிசைகள், மண் சுவர்கள் மற்றும் சேதமடைந்த கூரை வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி பரப்பளவுடன், கான்கிரீட் தளம் மற்றும் சமையலறையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் வீடுதோறும் சென்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கான தொகையானது பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்குக் கட்டடப் பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப தவணை முறையில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடு கட்ட கூடுதல் நிதி தேவைப்படுவோருக்குக் கூட்டுறவு வங்கிகள் அல்லது ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் தகுதியான பயனாளிகள் குறித்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் தங்களது உள்ளூர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம்.