சீனாவைச் சேர்ந்த ‘லியாங்ஃபாய் ஏஐ’ (Liangpei AI) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மேட்ச்மேக்கிங் தொடக்க நிறுவனம் (Startup), தனது பயனர்களுக்குப் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்தச் செயலியில் சேர ஆண்டுச் சந்தா கட்டணமாக 2,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 28,155) வசூலிக்கப்படுகிறது. சந்தா செலுத்தி 3 ஆண்டுகளுக்குள் திருமணம் ஆகவில்லை என்றால், வசூலிக்கப்பட்ட முழுத் தொகையும் பயனர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
வழக்கமான டேட்டிங் செயலிகளைப் போல இல்லாமல், இந்தச் செயலி ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே மேட்ச் (One-on-One matching) செய்யும் வசதியை வழங்குகிறது. ஒரே நேரத்தில் பலருடன் பேசுவது உண்மையான உறவை உருவாக்குவதில் கவனச்சிதறலை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அதன் நிறுவனர் ஜெங் சின்சுன் தெரிவித்துள்ளார். மேலும் 20 நிமிடங்கள் ஏஐ உடனான உரையாடலுக்குப் பிறகே பயனர்களின் விரிவான சுயவிவரம் (Profile) தயாரிக்கப்படுகிறது.
சீனாவில் இணையவழி டேட்டிங் துறை பெரிய அளவில் வளர்ந்து வரும் சூழலில், பயனர்களின் நம்பிக்கையைப் பெறவும் நீண்டகால உறவுகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிந்துள்ள நிலையில், இந்த மூன்று ஆண்டுத் திருமணக் கேரண்டி திட்டம் இணையவாசிகளிடையே பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்தச் செயலியின் முதல் கட்ட 3 ஆண்டு உத்தரவாதக் காலம் 2029-ஆம் ஆண்டில்தான் நிறைவடையும் என்பதால், பணத்தைத் திரும்பப் பெறும் உரிமைகோரல்கள் அப்போதுதான் தெரியவரும்.