உக்ரைனில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வரும் அணு ஆயுதப் பாதுகாப்பை நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தரப்பு மத்தியஸ்தர்களின் பேச்சுவார்த்தைக்கான ஆவணங்களில் இந்த முக்கிய நிபந்தனை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்குப் பிரிட்டன் தனது அணு ஆயுதக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்பது கிரெம்ளகத்தின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களில் நேரடித் தலையீடாகப் பார்க்கப்படுவதால் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கக் கூடாது என்பதுடன், கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் மாஸ்கோ தனது நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாகப் பிரிட்டன் பின்பற்றி வரும் அணு ஆயுதக் கூட்டாண்மையைச் சீர்குலைக்கும் வகையில் இந்த நிபந்தனைகள் அமைந்துள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
ரஷ்யாவின் இந்தக் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பிரிட்டன் தரப்பும் உடனடியாக நிராகரித்துள்ளன. ஐரோப்பாவின் பாதுகாப்பு என்பது மாஸ்கோவின் முடிவுக்கு உட்பட்டது அல்ல என்றும், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமை பெற்றுள்ளதாகவும் பிரிட்டிஷ் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா இதுபோன்ற கடினமான நிபந்தனைகளை விதித்து வருவதால், போர் முடிவுக்கு வருவதில் தொடர் சிக்கல்கள் நிலவி வருகின்றன.