Posted in

உலகளவில் பாதிப்பை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் சேவைகளில் உலகளவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அலுவலகப் பணிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாஃப்ட் 365 தொகுப்பில் உள்ள அவுட்லுக் (Outlook) மின்னஞ்சல் சேவை மற்றும் டீம்ஸ் (Teams) உரையாடல் செயலிகள் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

நின்னுபோன இந்தச் சேவைகளால் பெரு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சில உள்ளூர் அரசாங்கப் பணிகள் முடங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, மின்னஞ்சல் வழி அறிவிப்புகள் வராத காரணத்தினால் அமெரிக்காவின் சில பகுதிகளில் சிறைக்கைதிகள் ஜாமீன் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் திடீர் முடக்கம் இணையப் பாதுகாப்பு மற்றும் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சம் பரவிய நிலையில், இதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது சைபர் தாக்குதலோ அல்லது செயற்கை நுண்ணறிவு தொடர்பான பிழையோ கிடையாது என்றும், பிணையப் புதுப்பித்தலின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மின்னஞ்சல் வரிசைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்பச் சேவைகள் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருவதால் பயனர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் விலகி வருகின்றன.