Posted in

ஈரானிடம் 2,500 ஏவுகணைகள் கையிருப்பு: பிரிட்டனில் உள்ள அமெரிக்கத் தளத்திற்கும் அச்சுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகும் ஈரானிடம் 1,500 முதல் 2,500 வரையிலான ஏவுகணைகள் கையிருப்பில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. போருக்கு முந்தைய கையிருப்பில் பாதியளவு ஆயுதங்களை ஈரான் மீண்டும் கட்டமைத்துள்ளதாகவும், பிரிட்டனில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களைத் தாக்கக்கூடும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

மோதல்களில் ஏற்பட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி, ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த உதிரிபாகங்கள் மூலம் ஈரான் தனது ஏவுகணைக் கிடங்கை மெதுவாகப் புதுப்பித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலத்தடியில் உள்ள ரகசிய ஏவுகணை நகரங்கள் மற்றும் கையிருப்பில் உள்ள ஏவுகணைகளின் துல்லியமான எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினமாக இருந்தாலும், பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தும் திறன் ஈரானிடம் இன்னும் உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் நீண்ட தூரத் தாக்குதல் திறன் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் கூறிவந்த நிலையில், இந்த உளவுத்துறைத் தகவல் அதற்கு மாறாக அமைந்துள்ளது. இதனிடையே, ஈரானின் ஏவுகணைத் திறன் இதுவரை பார்த்ததை விட அதிக தூரம் செல்லக்கூடியது என அந்நாட்டு ஊடகங்கள் எச்சரித்துள்ள நிலையில், பிரிட்டனில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டனில் உள்ள ஆர்ஏஎப் லேக்கன்ஹீத் (RAF Lakenheath) மற்றும் மில்டன்ஹால் (RAF Mildenhall) ஆகிய தளங்களில் அமெரிக்க ராணுவம் உச்சகட்டப் பாதுகாப்பை அமல்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ஆர்ஏஎப் ஃபேர்ஃபோர்ட் தளத்திலிருந்து போர் விமானங்களை அமெரிக்கா இடமாற்றம் செய்துள்ளதுடன், அப்பகுதியில் காணப்பட்ட மர்ம ட்ரோன்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.