Posted in

அன்பில் மகேஷை 3-வது முறையாகச் சந்தித்த உதயநிதி: நாளை ஜாமீன் மனு விசாரணை

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 16) மூன்றாவது முறையாக நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோரும் உடனிருந்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இரண்டு முறை சிறைக்குச் சென்று அன்பில் மகேஷைச் சந்தித்திருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது மூன்றாவது முறையாகச் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, காவல்துறையின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தள்ளுபடி செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது பதிலளிக்கக் காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில், நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.