ஒரு காலத்தில் உலகக் கடற்பரப்பையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டனின் ராயல் கடற்படை (Royal Navy), இன்று தனது சொந்த நாட்டுப் பாதுகாப்பிற்காகப் பரம எதிரியான பிரான்ஸிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டன் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான போர்க்கப்பல்கள் பிரிட்டனிடம் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களை (Undersea cables) சீர்குலைக்க ரஷ்யா மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியிருப்பது கடந்த வாரம் அம்பலமானது. அந்த நேரத்தில், பிரிட்டனிடம் இருந்த ஒரே ஒரு ‘டிஸ்ட்ராயர்’ ரகக் கப்பலான ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon), மத்திய தரைக்கடல் பகுதியில் பணியில் இருந்தது. சொந்த எல்லைக்குள் எதிரி ஊடுருவும்போது அதைத் தடுக்கக்கூடக் கப்பல் இல்லாதது, பிரிட்டனின் ராணுவ பலவீனம் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தற்போது ராயல் கடற்படையிடம் உடனடித் தேவைக்கு வெறும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும், இரண்டு ஃபிரிகேட் (Frigate) ரகக் கப்பல்களும் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. புதினின் ‘கோஸ்ட் ஃபிளீட்’ (Ghost Fleet) எனப்படும் நிழல் உலகக் கப்பல்களைக் கட்டுப்படுத்தப் போதிய பலம் இல்லாததால், போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கடற்படைத் தலைமையகம் தற்போது பிரான்ஸின் உதவியை நாடத் திட்டமிட்டுள்ளது. “நமது சொந்த எல்லைகளைக் காக்கவே அடுத்த நாட்டு உதவியை எதிர்பார்க்கிறோம்” என்பது அந்நாட்டுப் பாதுகாப்பு வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தகவல்களை மறுத்து, “நாங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என்று கூறினாலும், கள யதார்த்தம் வேறாக உள்ளது. ஏற்கனவே நேட்டோ (NATO) படையின் தலைமையைப் பிரிட்டனிடம் இருந்து ஜெர்மனி தட்டிப்பறித்த நிலையில், இப்போது பிரான்ஸிடம் கையேந்தும் நிலை பிரிட்டனின் ‘உலக வல்லரசு’ என்ற பிம்பத்திற்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் வேளையில், பிரிட்டனின் இந்த ராணுவச் சரிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.