திருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதில், பொலிசாருக்கு சம்பளத்தை உயர்த்தவும், வேலை பழுவில் உள்ள பொலிசாருக்கு விடுமுறை கொடுக்கவும் தான் திட்டங்களை வைத்திருப்பதாக கூறியதோடு. ஆபத்தான இடங்களுக்கு பெண் பொலிசாரை அனுப்ப மாட்டோம் என்றும், பெண் பொலிசாரின் பாதுகாப்பை தனது TVK அரசு நிச்சயம் நிலை நாட்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் பரப்புரையை முடித்துக்கொண்டு செல்லும் வேளையில், பொலிசார் பலர் விஜக்கு அருக்கே சென்று செல்ஃபி எடுத்துக் கொண்ட காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. (Full Story)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலர்கள், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான அதிரடியான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அடிப்படை ஊதியத்தை 18,200 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்துவதாகவும், மன அழுத்தம் நிறைந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு கூடுதலாக 1,000 ரூபாய் சிறப்புப்படி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், பெண் காவலர்களை பாதுகாப்பு (Bandobust) பணிகளில் ஈடுபடுத்துவதில் இருந்து விலக்கு அளிப்போம் என்றும், அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார். மேலும், நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்றும், பயிர்களுக்கு 100 சதவீத காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நெசவாளர்களின் நலனுக்காக, ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 30,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும், நெசவாளர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கைத்தறி நெசவுப் பிரிவுகளுக்கு 500 யூனிட்களும், விசைத்தறிப் பிரிவுகளுக்கு 1,500 யூனிட்களும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், நெசவாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் விஜய் தனது உரையில் தெரிவித்தார்.