ஐரோப்பா மற்றும் உலக நாடுகளுக்குப் பயணம் செய்ய ஏற்கனவே விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ள தமிழர்கள், தயவுசெய்து உங்கள் விமானத்தின் தற்போதைய நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போரினால் விமான எரிபொருள் (Jet Fuel) விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது காலதாமதம் ஆகலாம் என்பதால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் விழிப்புடனும் கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஈரானுடனான மோதல் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) தற்போது மூடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் எரிபொருள் கப்பல்கள் முடங்கியுள்ளதால், இன்னும் ஆறு வாரங்களில் ஐரோப்பாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரித்துள்ளது. “வரலாற்றிலேயே நாம் சந்திக்காத மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை இப்போது எதிர்கொள்கிறோம்” என அதன் இயக்குனர் பாத்தி பிரோல் கவலை தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்து நிபுணர் சாலி கெதின் கூறுகையில், “இந்த வழித்தடம் இன்னும் 6 முதல் 8 வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தால், அது விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாழ்வா-சாவா போராட்டமாக (Existential Crisis) மாறும்” எனத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை ஏற்கனவே இரண்டு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், நஷ்டத்தைத் தவிர்க்க பல நிறுவனங்கள் நீண்ட தூர விமானப் பயணங்களை ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. லங்காஸ்டர் மற்றும் பல ஐரோப்பிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே 1% முதல் 10% வரை தங்களது சேவைகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருகின்றன.
இந்த எரிபொருள் நெருக்கடி காரணமாக விமான டிக்கெட் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் லட்சக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதால், கோடைக்கால விடுமுறைக்குத் திட்டமிட்டுள்ள பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். பயணிகள் தங்களது பயணக் காப்பீடு (ATOL/Travel Insurance) சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.