வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அதிரடியாக கைது செய்யும் ரகசிய ராணுவ நடவடிக்கையை வைத்து, பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அமெரிக்க சிறப்புப் படை வீரர் தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘மாஸ்டர் சார்ஜென்ட்’ அந்தஸ்தில் உள்ள கேனான் கென் வான் டைக் என்பவர், இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி நார்த் கரோலினாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் ரகசியத்தைப் பாதுகாப்பதே தனது கடமை என்பதை மறந்து, அதை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) என்ற ரகசியத் திட்டத்தின் கீழ் மதுரோ பிடிபடுவார் என்று பாலிமார்க்கெட் (Polymarket) என்ற இணையதளத்தில் வான் டைக் பெட்டிங் கட்டியுள்ளார். மதுரோ ஜனவரி மாதத்திற்குள் பதவியில் இருக்க மாட்டார் என்று சுமார் 26 லட்சம் ரூபாயை ($32,000) பந்தயம் கட்டிய அவருக்கு, மதுரோ பிடிபட்டவுடன் சுமார் 3.3 கோடி ரூபாய் ($400,000) லாபமாகக் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்பதால், ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வான் டைக், தனது லாபப் பணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி வெளிநாட்டு கிரிப்டோகரன்சி (Cryptocurrency) கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது ஆன்லைன் புரோக்கரேஜ் கணக்கிற்குப் பணத்தைக் கொண்டு வந்து மறைக்க முயன்றதாகப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரோ பிடிபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை இவர் பந்தயம் கட்டியதும், அதன்பின் ஆயுதங்களுடன் கப்பலில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும் தற்போது ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர், நாட்டின் பாதுகாப்பை விடத் தனது சுய லாபத்திற்கு முக்கியத்துவம் அளித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மீது திருட்டு, மோசடி மற்றும் அரசு ரகசியங்களைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 5 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்க ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ள நிலையில், நீதிமன்ற விசாரணையை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கி வருகிறது.