2016 மற்றும் 2021ல் நடந்த தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணும் நிலையங்களில் பொதுவாக திமுகாவின் முகவர்கள் அதிகமாக இருப்பார்கள். இவர்கள் பல தில்லு முல்லு வழிகளை பாவித்து, குறைந்த எண்ணிக்கையில் தோற்றுப் போகும் திமுக வேட்பாளர்களை வெல்ல வைத்து விடுவார்கள். அது எப்படி என்பது ஊர் அறிந்த விடையம். ஆனால் இந்த முறை அது நடக்க வாய்ப்பே இல்லை ராஜா என்றாகிவிட்டது.
தமிழகத்தில் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் முன்எப்போதும் இல்லாத வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அத்துமீறி நுழையும் நபர்களைத் தடுக்க, கியூ.ஆர் கோட் (QR Code) அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகளைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் முறையான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய பாதுகாப்பு முறையில் மூன்று அடுக்கு சோதனைகள் பின்பற்றப்பட உள்ளன. முதற்கட்டமாக அதிகாரிகளின் அடையாள அட்டைகள் சோதிக்கப்படும்; இறுதி மற்றும் மிக முக்கிய கட்டமாக கியூ.ஆர் கோட் ஸ்கேனிங் (QR Code Scanning) முறை அமல்படுத்தப்படும். ஸ்கேனிங் வெற்றிகரமாக முடிந்த பின்னரே அதிகாரிகள் மற்றும் ஏஜென்டுகள் வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை வெளிப்படையான தேர்தல் முடிவுகளை உறுதி செய்ய உதவும் என்று ஆணையம் நம்புகிறது.
இந்தக் கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டுமின்றி, வேட்பாளர்கள், தேர்தல் ஏஜென்டுகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காகத் தனி ஊடக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கிய முறையான கடிதங்களைச் சமர்ப்பித்த பின்னரே உள்ளே நுழைய முடியும்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களிலும் இந்த கியூ.ஆர் கோட் நடைமுறையைப் பின்பற்றத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. முறையான மற்றும் பாதுகாப்பான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்ய மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் இது குறித்துக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.