Posted in

புதின் மாளிகை அருகே தீப்போர்! கண்முன்னே எரிந்த கப்பல்; ‘பதுங்கு குழியில்’ பதுங்கிய ரஷ்ய அதிபர்? – 1 பில்லியன் பவுண்ட் அரண்மனைக்கு வந்த ஆபத்து

ரஷ்யாவின் கிராஸ்னோடர் (Krasnodar) மாகாணத்தில், கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புதினின் 1 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பிரம்மாண்ட மாளிகைக்கு மிக அருகாமையில் உக்ரைன் ட்ரோன்கள் இன்று அதிரடித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் இருந்த கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதிபரின் சொகுசு மாளிகையில் இருந்தே இந்தக் காட்சிகள் தெளிவாகத் தெரிந்த நிலையில், ரஷ்யப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் களமிறங்கித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது மாளிகை அருகிலேயே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது புதினை அதிர வைத்துள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்கள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதிய விளாடிமிர் புதின், கடந்த சில வாரங்களாகத் தனது வழக்கமான இல்லங்களைத் தவிர்த்து ரகசியப் பதுங்கு குழிகளில் (Underground Bunkers) தங்கியிருப்பதாக ஐரோப்பிய உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அதிநவீன வசதிகள் கொண்ட நிலத்தடிப் பதுங்கு குழியில் இருந்து அவர் தனது பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ட்ரோன் மூலம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, அவர் பொது இடங்களுக்கு வருவதைக் குறைத்துக்கொண்டுள்ளதாகவும், அவரது பெரும்பாலான வீடியோக்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டவை என்றும் உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

புதினின் பாதுகாப்புப் படையான எஃப்.எஸ்.ஓ (FSO), தற்போது அவரது பாதுகாப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தியுள்ளது. மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. புதினின் சமையல்காரர்கள், மெய்க்காப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கூட இணைய வசதி கொண்ட அலைபேசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு, கடும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதினுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளே அவருக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்ட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதே இந்த அதீத பயத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உக்ரைன் தரப்பில் நடத்தப்படும் இந்தத் துல்லியமான தாக்குதல்கள் ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. புதினின் சொகுசு மாளிகை அமைந்துள்ள கெலென்ட்ஜிக் (Gelendzhik) பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நிகழ்வது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “பயந்துபோன புதின்” (Scaredy Vlad) எனச் சர்வதேச ஊடகங்கள் அவரை விமர்சித்து வரும் நிலையில், ரஷ்யாவிற்குள்ளேயே புதினுக்கு எதிராக அதிருப்தி கிளம்பியுள்ளதாகத் தெரிகிறது. போரின் தாக்கம் இப்போது ரஷ்யாவின் மையப்பகுதிக்கும், அதிபரின் படுக்கையறை வரைக்கும் வந்துள்ளதை இன்றைய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.