Posted in

சென்னையில் இனி கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி! – மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முக்கிய நடவடிக்கை!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இலவச உயர்வேக வைபை (Wi-Fi) வசதியை ஏற்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்குத் தடையற்ற டிஜிட்டல் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை (Hotspots) அமைப்பது குறித்து விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் (Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி ஃபைபர்நெட் (ACT) உள்ளிட்ட முன்னணி இணைய சேவை வழங்குநர்களின் (ISPs) பிரதிநிதிகளுடனான உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்களின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலம் எளிதில் இந்த இலவச இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகள் செய்யப்படவுள்ளன. வேலைநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.