இங்கிலாந்தின் பிளாக்பூல் (Blackpool) பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஜேமி வார்லி (Jamie Varley) என்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது கூட்டாளி ஜான் மெகோவன் (John McGowan) ஆகியோர் 13 மாத குழந்தையான பிரஸ்டன் டேவியை (Preston Davey) தத்தெடுக்க விண்ணப்பித்திருந்தனர். 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்குழந்தை இவர்களது பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அடுத்த நான்கு மாதங்களுக்குள் அக்குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. விசாரணையில், அக்குழந்தை முறையாகப் பராமரிக்கப்படாமல், பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.
சமீபத்தில் நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட வீடியோவில், குழந்தை உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தபோது ஜேமி வார்லி தரையில் விழுந்து கதறி அழுவது பதிவாகியுள்ளது. “எல்லாம் என் தப்பு, நான் அவனைக் கவனித்துக் கொள்ளாமல் இரண்டு நிமிடம் தனியாக விட்டுவிட்டேன்… தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள்” என்று அவர் அலறுவது அந்த வீடியோவில் உள்ளது. ஆனால், இது அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக அவர் நடத்திய நாடகம் என்றும், அக்குழந்தையின் மரணம் ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பீட்டர் ரைட் (Peter Wright) வாதிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், அக்குழந்தையின் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. குறிப்பாக 30 வெளிக்காயங்கள், உடைந்த கை எலும்பு, மற்றும் தொண்டை மற்றும் வாய் பகுதிகளில் கடுமையான உட்புறக் காயங்கள் கண்டறியப்பட்டன. குழந்தை குளியல் தொட்டியில் விழுந்து மூழ்கியதாக ஜேமி வார்லி கூறிய போதிலும், குழந்தையின் உடலில் தண்ணீர் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, கைகளாலோ அல்லது துணியாலோ குழந்தையின் மூச்சுக் குழாயை அழுத்தி, மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜேமி வார்லியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அக்குழந்தையைச் சித்திரவதை செய்த மற்றும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 13-க்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன. “குழந்தையோடு என்னால் ஒட்ட முடியவில்லை, என் மனதில் சில இருண்ட எண்ணங்கள் (Dark thoughts) தோன்றுகின்றன” என்று அவர் தனது சக ஊழியரிடம் முன்னரே கூறியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஜேமி வார்லி மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.