அர்ஜென்டினாவில் இருந்து கேப் வெர்டே நோக்கி 147 பயணிகளுடன் சென்ற ‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் இந்தத் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். ஆனால், முதல் மரணம் நிகழ்ந்த பிறகும், கப்பல் நிர்வாகம் பயணிகளுக்கு ஆபத்தை எச்சரிக்காமல், ஏதும் நடக்காதது போல் டெக்கில் (Deck) பார்பிக்யூ விருந்து நடத்தியதாகக் கப்பலில் இருந்த பயணி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். “மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அருவருக்கத்தக்கது” என்று அவர் சாடியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் மற்றொரு பகீர் திருப்பமாக, வைரஸ் பாதிப்புடன் கப்பலில் இருந்து வெளியேறிய பயணி ஒருவர், ஜோகன்னஸ்பர்க் நோக்கிச் சென்ற விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். தற்போது அந்த விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவருக்கும் ஹண்டாவைரஸ் அறிகுறிகள் தென்படுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது. ஆனால், இந்தச் சம்பவத்தில் மனிதர்களிடையே தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் உலக சுகாதார நிறுவனத்தை (WHO) கவலையடையச் செய்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தொற்றினால் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். “ஆண்டீஸ் வைரஸ்” (Andes virus) என்ற ஹண்டாவைரஸின் ஒரு வகை, மனிதர்களிடையே நெருங்கிய தொடர்பின் மூலம் பரவக்கூடியது. கப்பலில் இருந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பயணி சென்ற விமானத்தில் இருந்தவர்கள் எனப் பலரும் தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விமானப் பணிப்பெண் குறித்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கப்பல் தற்போது கேப் வெர்டே கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள் கப்பலை முழுமையாகத் தூய்மைப்படுத்தவும், மற்ற பயணிகளைப் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கப்பல் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்துப் பயணிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். “பயணிகளின் பாதுகாப்பை விட லாபத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஹண்டாவைரஸ் விவகாரம் சுற்றுலாத் துறையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.