பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட தொழிலாளர் கட்சி எம்.பி. ஜார்ஜ் சிமன்ஸ் (Josh Simons), ‘தி டைம்ஸ்’ இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ஸ்டார்மரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “நமது பிரதமர் நாட்டின் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார். அவர் இப்போது செய்ய வேண்டிய ஒரே காரியம், ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளைச் செய்துவிட்டுப் கண்ணியமாகப் பதவியிலிருந்து விலகுவதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சிக்குள்ளேயே ஸ்டார்மருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குரல் எழுப்பப்படுவது பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த பிராந்திய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி 1,100-க்கும் மேற்பட்ட இடங்களை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வேல்ஸ் (Wales) பகுதியில் 27 ஆண்டுகால ஆட்சியைத் தொழிலாளர் கட்சி பறிகொடுத்துள்ளது. இதற்கு நேர்மாறாக, நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தலைமையிலான வலதுசாரி கட்சியான ‘ரிஃபார்ம் யுகே’ (Reform UK) சுமார் 1,400 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவுகள் ஸ்டார்மர் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் ஸ்டார்மர் அரசு எடுத்து வரும் முடிவுகள் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், ஊழல் புகாரில் சிக்கிய பீட்டர் மண்டெல்சனை (Peter Mandelson) அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்த ஸ்டார்மரின் முடிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் (Catherine West), ஸ்டார்மருக்கு எதிராகத் தலைமைப் போட்டியை உருவாக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை அமைச்சரவை ஸ்டார்மரை மாற்ற முன்வரவில்லை எனில், தாம் அந்த முயற்சியைத் தொடங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார். “இந்தத் தேர்தல் முடிவுகள் கடினமானவைதான்; ஆனால் நாட்டைச் சீரமைக்க எனக்கு 10 ஆண்டுகள் தேவை. நான் பாதியிலேயே விலகி நாட்டைப் பெருங்குழப்பத்தில் தள்ள மாட்டேன்” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். திங்கட்கிழமை (இன்று) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள அவர், புதிய திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மருக்கு எதிரான இந்த உட்கட்சிப் போர் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் எனத் தெரிகிறது.