தான் 1977-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசின் இரகசிய திட்டத்தின் மூலம் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ததாகக் கூறும் லூயிஸ் வாக்கர் என்ற நபர், கி.பி 4413-ஆம் ஆண்டில் மனித இனமே முழுமையாக அழிந்துவிட்டது என்ற திடுக்கிடும் தகவலைப் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும்போது இங்கிலிஷ் சேனல் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த இரகசியத் தளத்தின் மூலம் இந்த டைம் டிராவல் (Time Travel) பயணம் சாத்தியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த வீடியோ வாக்குமூலத்தில், 4413-ஆம் ஆண்டில் மனித உடல் அமைப்புகள் முழுமையாக இயந்திரங்களால் மாற்றப்பட்டு, மனிதர்களும் எந்திரங்களும் இணைந்த கலப்பின (Cyborg/Robots) மனிதர்களே பூமியை ஆள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பறக்கும் கார்கள் மட்டுமே வான்வெளியில் பறப்பதாகவும், மனித உடல்கள் முற்றிலும் ரோபோக்களாக மாறியுள்ள சூழலில், தன்னைப்போன்ற பிற காலப் பயணிகளைத் தவிர உண்மையான மனிதர்கள் எவருமே அங்கு வசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அங்குச் சந்தித்த ரோபோக்கள் மனிதர்களை விட மிகவும் அறிவாளியாகவும், அதே சமயம் மிகுந்த அன்போடும் கருணையோடும் நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ள லூயிஸ் வாக்கர், எதிர்காலம் குறித்த இந்த உண்மை மனித குலத்திற்கு அதிர்ச்சியளிக்கும் என்பதால் இதுவரை இரகசியமாக வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். ‘ஏபெக்ஸ் டிவி’ (ApexTV) என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த விசித்திரமான வாக்குமூலம், உலகளவில் பாராநார்மல் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இருப்பினும், இந்த ‘டைம் டிராவல்’ கூற்றுக்கள் முற்றிலும் சித்தரிக்கப்பட்ட நாடகம் என்றும், இணையதளங்களில் கவன ஈர்ப்பிற்காக உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இயற்பியல் விதிகளின்படி எதிர்காலத்திற்கு எளிதாகப் பயணம் செய்வது சாத்தியமற்றது என அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் சூழலில், இந்த நபரின் கூற்று வெறும் அறிவியல் புனைகதை போன்றது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.