Posted in

மக்களைப் பிரிக்கும் கொள்கை ஒழியட்டும் – தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு விவாதம்; எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சபாநாயகராகத் தவெக-வின் ஜே.சி.டி. பிரபாகர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரித்துப் பார்க்கும் சனாதன தர்மம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். ஏற்கனவே இந்தக் கருத்துக்காக அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையிலும், சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற பேச்சுகளை ‘வெறுப்புப் பேச்சு’ (Hate Speech) என்று கண்டித்திருந்த நிலையிலும், அவர் சட்டப்பேரவையிலேயே இதைக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கும் அவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். “எந்தச் சூழலிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடத்தில்தான் இருக்க வேண்டும். ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாநிலப் பாடலைப் பின்னுக்குத் தள்ளியதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார். இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழக் கூடாது என்று அரசுக்கு அவர் அறிவுறுத்தினார். அப்போது ஆளும் கட்சி வரிசையில் இருந்த முதலமைச்சர் விஜய், உதயநிதியின் பேச்சைக் கேட்டு புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மீண்டும் இத்தகைய நச்சுத்தன்மையுள்ள கருத்துகளைப் பேசி வருகிறார். தமிழகத்தின் இலச்சினையிலேயே கோவில் கோபுரம் இருப்பதை அவர் மறந்துவிடக் கூடாது. மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் இத்தகைய நபர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று அவர் சாடியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த படுதோல்விக்குப் பிறகும் உதயநிதி தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தானும் முதலமைச்சர் விஜய்யும் ஒரே கல்லூரியில் (லயோலா கல்லூரி) படித்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, “நாங்கள் கல்லூரியில் ஜூனியராக இருந்தாலும், ஆட்சியில் சீனியர்கள். எனவே எங்கள் அனுபவத்தையும், ஆலோசனைகளையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பும் ஒருவருக்கொருவர் முதிர்ச்சியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.