Posted in

பள்ளி அருகே பயங்கரத் தீ விபத்து: இங்கிலாந்தில் சரிந்து விழுந்த வணிகக் கட்டிடம்!

ஸ்டாக்டன் நகரின் ‘யார்ம் லேன்’ (Yarm Lane) பகுதியில் உள்ள பிரபல ‘கேலக்ஸி பிளைண்ட்ஸ்’ (Galaxy Blinds) நிறுவனத்தின் கட்டிடத்தில் இன்று காலை 7.45 மணியளவில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி, விண்ணை முட்டும் அளவுக்குக் கரும்புகையை வெளியேற்றியது. தீயின் வெப்பம் தாங்காமல் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் பயங்கரமாகச் சரிந்து விழுந்தன. இச்சம்பவம் நடந்த போது அருகில் இருந்த நார்த் ஷோர் அகாடமி (North Shore Academy) பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

சம்பவ இடத்திற்கு ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடத்தின் சிதிலங்கள் மற்றும் இடிபாடுகள் சாலைகளில் விழுந்து கிடந்ததால் அந்தப் பகுதி முழுமையாக மூடப்பட்டது. தீ விபத்து காரணமாகக் கரும்புகை பல மைல் தூரத்திற்குப் பரவியதால், அப்பகுதி மக்கள் தங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் 40 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த அந்த வணிக நிறுவனம் முற்றிலும் சாம்பலானது. “எங்கள் வாழ்வாதாரமே கண் முன்னே எரிந்து சாம்பலாகிவிட்டது” என அதன் உரிமையாளர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட போது கட்டிடம் காலியாக இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், அருகில் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய பகுதிகளையும் இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டாக்டன் நகரின் முக்கியப் பகுதியான யார்ம் லேன் சாலை மூடப்பட்டுள்ளதால், அந்த நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாட்களாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.