இங்கிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பிரைட்டன் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் மூன்று பெண்கள் கடலில் தத்தளிப்பதாக மீட்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மேடிரா டிரைவ் (Madeira Drive) பகுதிக்கு அருகே மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட இவர்கள், பிரைட்டன் கடற்கரையில் உள்ள ‘குவாட்டர்ஸ்’ (Quarters) என்ற இரவு விடுதியில் நடந்த மாணவர்களுக்கான சிறப்பு விருந்தில் பங்கேற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அந்தத் இரவு விடுதி கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்தனர். அதிகாலையில் விடுதியிலிருந்து வெளியேறிய அந்தப் பெண்கள், கடற்கரை மணலில் மது அருந்தியவாறு பொழுதைக் கழித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கைப்பைகள், செல்போன்கள் மற்றும் ஒரு கோட் ஆகியவை கடற்கரை மணலில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடற்கரை ஓரத்தில் மாணவர்கள் குடிப்பதும் புகைப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சசெக்ஸ் (Sussex) காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் முழுமையாக உடை அணிந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ‘பேலஸ் பியர்’ (Palace Pier) பகுதி அருகே கடலில் இறங்கியிருக்கலாம் என்றும், பலத்த காற்றால் அலைகளில் சிக்கி மெரினா பகுதி வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை இந்த மரணங்களில் சந்தேகத்திற்கிடமான மற்ற நபர்களின் தொடர்பு குறித்து எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரைட்டன் கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிரைட்டன் கவுன்சில் தலைவர் பெல்லா சாங்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாணவர் கொண்டாட்டத்தின் இறுதியில் நேர்ந்த இந்த அகால மரணங்கள், கடற்கரை விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.