அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலாச்சாரப் பயணமாக பெய்ஜிங்கின் புகழ்பெற்ற ‘சொர்க்கக் கோவில்’ பகுதிக்குச் சென்றபோது இந்தச் சர்ச்சை வெடித்தது. அதிபருடன் வந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மற்றும் ரகசிய சேவை வீரர்களைச் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு அறையில் தடுத்து நிறுத்த முயன்றனர். “நாங்கள் வரலாற்றைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் ஆவேசமாகக் கத்தியும், சீன அதிகாரிகள் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. இதனால் இரு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், அதிபருடன் வந்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியுடன் கோவிலுக்குள் நுழையச் சீன அதிகாரிகள் தடை விதித்தனர். சர்வதேச மரபுப்படி அதிபரின் மெய்க்காப்பாளர்கள் ஆயுதம் ஏந்துவது வழக்கம் என்றாலும், சீனப் பாதுகாப்புத் துறையினர் அதற்கு உடன்பட மறுத்தனர். இதனால் சுமார் 30 நிமிடம் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இறுதியில் உயர்மட்டத் தலையீட்டிற்குப் பிறகே நிலைமை சீரானது. இந்த மோதலின் போது வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கீழே தள்ளப்பட்டதில் லேசான காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம், தைவான் விவகாரம் மற்றும் ஈரான் போர் தொடர்பாகக் கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தச் பாதுகாப்புச் சிக்கல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்துள்ளது. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ‘டிஜிட்டல் லாக்டவுன்’ (Digital Lockdown) எனப்படும் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டதும் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்கத் தரப்பில் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குக் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்த மோதல் குறித்து சீன அரசு ஊடகங்கள் மௌனம் காத்தாலும், அமெரிக்க ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை நேரலையாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளன. இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் ஒரு மிக முக்கியமான உச்சிமாநாட்டில், பாதுகாப்பு அதிகாரிகளே நேருக்கு நேர் மோதிக்கொண்டது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையில் இந்தச் சம்பவங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.