அமெரிக்காவின் வடக்கு எல்லை வழியாக கனடாவிலிருந்து இந்தியர்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய வழக்கில், 22 வயதான சிவம் (Shivam) என்ற இந்திய இளைஞர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2024 அக்டோபர் முதல் 2025 ஜூன் வரை இந்த கடத்தல் கும்பலைச் சிவம் ஒருங்கிணைத்து வந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. கனடா எல்லையைக் கடந்து வரும் நபர்களை வாகனங்கள் மூலம் நியூயார்க்கின் பிளாட்ஸ்பர்க் (Plattsburgh) பகுதியில் உள்ள ரகசிய விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்வதே இவர்களது முக்கிய வேலையாக இருந்துள்ளது. இதற்காக அவர் ஓட்டுநர்களுக்கு ஒரு நபருக்கு தலா 100 டாலர் (சுமார் ₹8,300) வீதம் கூலி கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற இரண்டு வாகனங்களை மறிக்க முயன்றபோது இந்த ரகசிய நெட்வொர்க் அம்பலமானது. அதிகாரிகளைக் கண்டவுடன் அந்த வாகனங்கள் அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றன. நீண்ட தூரத் துரத்தலுக்குப் பிறகு, ஒரு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது, மற்றொரு வாகனம் நியூயார்க்கின் மூர்ஸ் (Mooers) பகுதியில் பிடிபட்டது. அந்த இரண்டு வாகனங்களிலும் இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் (UK) சேர்ந்த மொத்தம் 12 சட்டவிரோதக் குடியேறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலம் ஓட்டுநர்களுடன் சிவம் நடத்திய உரையாடல்களை ஆய்ந்தபோது, அவர் பலமுறை இத்தகைய கடத்தல் சம்பவங்களை ஒருங்கிணைத்தது உறுதியானது. நிதி ஆதாயத்திற்காக மனிதக் கடத்தலில் ஈடுபட்டது மற்றும் சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. “அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி, பணத்திற்காக மனித உயிர்களைப் பணையம் வைத்தது மன்னிக்க முடியாதது” எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சிவம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால், அவருக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் நபர்களைக் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய வைக்கும் இந்த ஆபத்தான பாதையைத் தற்கால இளைஞர்கள் பணத்திற்காகப் பயன்படுத்துவது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2022-இல் இது போன்ற ஒரு கடத்தலின் போது இந்தியக் குடும்பம் ஒன்று உறைபனியில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வடக்கு எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தற்போது பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.