Posted in

காங்கிரஸுக்கு சுற்றுலாத் துறை? தவெக அமைச்சரவை விரிவாக்கம்; அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு கல்தா? – விஜய் அதிரடி வியூகம்!

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118) காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை அளித்தனர். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிப் அதிகாரத்தில் பங்கெடுக்கும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இரண்டு முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதில், குறிப்பாகத் தமிழகத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றான ‘சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை’ காங்கிரஸ் வசம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தவெக-விற்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்குச் சுற்றுலாத் துறையும், மற்றொருவருக்குப் பால்வளத்துறை அல்லது கதர் வாரியம் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகத் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதால், டெல்லி மேலிடம் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி (TNCC) இடையே தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிர ஆலோசனைகள் நிலவி வருகின்றன.

மறுபுறம், தவெக அரசுக்குப் பின்னால் இருந்து ஆதரவளிக்க முன்வந்த அதிமுகவின் 24 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் நிலை என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் குடைச்சலைக் கொடுத்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசுக்கு ஆதரவளிக்க முயன்ற இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் மூலம் தங்களது எம்.எல்.ஏ பதவி பறிபோகக் கூடும் என்பதால், இப்போதைக்கு இவர்களை அமைச்சரவையில் சேர்ப்பதைத் தவெக தலைமை தவிர்த்து வருவதாகத் தெரிகிறது.

அதிமுக அதிருப்தியாளர்களுக்கு இப்போதைக்கு அமைச்சர் பதவி வழங்கினால், அது சட்ட ரீதியான சிக்கல்களையும், அரசியல் ரீதியாகத் தவெக-விற்குப் பின்னடைவையும் ஏற்படுத்தும் என விஜய் கருதுகிறார். இதனால், அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் அல்லது மறைமுக ஆதரவுக்கான சலுகைகள் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தனது எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைக்கப் போராடி வரும் நிலையில், தவெக-வின் இந்த ராஜதந்திர நகர்வு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.