Posted in

சீனாவின் பிடியில் புடின்! ஷி ஜின்பிங்கிடம் 3 முக்கிய உதவிகளைக் கோரும் ரஷ்யா; பெய்ஜிங்கில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்துச் சென்ற சில தினங்களிலேயே புடின் பெய்ஜிங் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அவசரச் சந்திப்பில், தனது பொருளாதார மற்றும் ராணுவத் தேவைகளுக்காகச் சீனாவை மட்டுமே நம்பியிருக்கும் புடின், ஷி ஜின்பிங்கிடம் முக்கியமாக மூன்று விஷயங்களை ‘பிச்சையாகக் கேட்கும்’ (Begging for three things) கட்டாயத்தில் இருப்பதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உக்ரைன் போரைத் தொடர்வதற்கான மேம்பட்ட ராணுவத் தளவாடங்கள், மேற்கத்திய தடைகளைத் தகர்க்கும் வகையிலான நிதி உதவி மற்றும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை முழுமையாகச் சீனா கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதம் ஆகியவையே அந்த மூன்று கோரிக்கைகள் ஆகும்.

நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் உக்ரைன் போரில் ரஷ்யாவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததால், உள்நாட்டில் புடினின் ‘வலிமையான தலைவர்’ என்ற பிம்பம் உடையத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரம் தற்போது முற்றிலும் சீனாவின் சந்தையையும் அதன் யுவான் (Yuan) நாணயத்தையும் சார்ந்தே இயங்கி வருகிறது. இந்த சமநிலையற்ற உறவினால், சம அந்தஸ்தில் இருந்த இரு நாடுகளின் கூட்டணி மாறி, தற்போது புடின் முற்றிலும் ஷி ஜின்பிங்கின் ‘கைகளில் அடங்கிப்போகும்’ (In Xi’s pocket) சூழல் உருவாகியுள்ளதாகப் பிரிட்டன் ராணுவப் பிரமுகர்கள் எச்சரிக்கின்றனர்.

மறுபுறம், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குத் தனது ராஜதந்திர பலத்தைக் காட்டுவதற்காகவே சீனா இந்தச் சந்திப்பைப் பயன்படுத்தி வருகிறது. வாஷிங்டன் தங்களை எளிதாகத் தனிமைப்படுத்த முடியாது என்பதை நிரூபிக்க, ரஷ்யா போன்ற அணுஆயுத வல்லரசு தங்களுக்குப் பின்னால் இருப்பதை சீனா உலகிற்கு உணர்த்துகிறது. இருப்பினும், இந்த ‘புதிய அச்சு நாடுகள்’ கூட்டணி நாஜி ஜெர்மனியை விட உலக அமைதிக்கு ஆபத்தானது என ஜேபி மோர்கன் (JP Morgan) தலைமை நிர்வாகி உள்ளிட்ட சர்வதேசப் பொருளாதார மேதைகள் எச்சரித்துள்ளதால் உலக சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.