தென்காசி மாவட்டத்தில் அண்மையில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அரசுப் பொது மருத்துவமனை மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகம் ஆகியவற்றிற்குள் தன்னிச்சையாக நுழைந்து ‘திடீர் ஆய்வு’ (Unauthorised Inspections) நடத்தியுள்ளனர். தவெக-வின் மருத்துவ அணிச் செயலாளரான வசுதேவி என்பவர் வெள்ளை நிறக் கோட் அணிந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் சிகிச்சை விவரங்கள் குறித்தும், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அங்கிருந்த மருத்துவர்களிடம் அதிகாரத் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்த அரசு மருத்துவர்கள் மற்றும் திமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதேபோல் மற்றொரு சம்பவமாக, முதலமைச்சர் விஜய் அம்மா உணவகங்களைச் சீரமைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தவெக தென்காசி மாவட்டச் செயலாளர் நியாஸ் என்பவர் கடையநல்லூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டுப் பார்த்த அவர், உணவகப் பணியாளர்களைத் தூய்மையாகச் செயல்படுமாறு அறிவுறுத்தியதுடன், கடையநல்லூர் நகராட்சி ஆணையாளரையும் நேரில் சந்தித்து அம்மா உணவகத்தை மேம்படுத்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படாத, எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஆளுங்கட்சியினர் அரசு ஊழியர்களுக்கு இத்தகைய கட்டளைகளைப் பிறப்பிப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனப் புகார்கள் எழுந்துள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகக் கூறி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGEA) தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. “அரசுப் பொறுப்பில் இல்லாத தவெக உறுப்பினர்களின் உத்தரவுகளையோ அல்லது கட்டளைகளையோ ஏற்று எங்களால் கடமையாற்ற முடியாது; இது ஊழியர்களின் மாண்பைக் குலைக்கும் செயல்” என்று நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சுப்பு கண்டனம் தெரிவித்துள்ளார். வசுதேவி தான் ஒரு மருத்துவர் அல்ல, 15 ஆண்டுகள் அனுபவமுள்ள செவிலியர் என்றும், சுகாதார அமைச்சருக்குப் பரிந்துரைகளை அனுப்பவே மருத்துவமனைக்குச் சென்றதாகத் தன் மீதான விமர்சனங்களுக்குச் சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், “அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் தங்களது வரம்புகளை மீறிச் செயல்படுவது ஆளுங்கட்சியின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும். இத்தகைய அநாகரிகமான செயல்களை முதலமைச்சர் விஜய் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று சாடியுள்ளார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் காட்டி வரும் இந்த ஆளுங்கட்சி ‘மமதை’ப் போக்கு, புதிய தவெக அரசுக்கு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.