அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அரசு ஆவணங்களைப் பாதுகாப்பதைக் கட்டாயமாக்கும் 1978-ஆம் ஆண்டின் ‘அதிபர் ஆவணங்கள் சட்டத்தை’ (Presidential Records Act – PRA) இனி பின்பற்றத் தேவையில்லை என்று அண்மையில் அறிவித்தது. இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என நீதித்துறை மூலம் டிரம்ப் வாதிட்டார். இந்நிலையில், வாஷிங்டன் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ஜான் பேட்ஸ், டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்குக் கடுமையான தடை விதித்து, அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதி ஜான் பேட்ஸ் தனது 54 பக்க தீர்ப்பில், ஜார்ஜ் ஆர்வெல்லின் புகழ்பெற்ற ‘1984’ நாவலின் வரிகளை மேற்கோள் காட்டி, வரலாற்றை மாற்ற நினைக்கும் நிர்வாகத்தின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார். “கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர் எதிர்காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்” என்று குறிப்பிட்ட நீதிபதி, வரலாற்று ஆவணங்கள் யாருக்கும் தனிப்பட்ட சொந்தமல்ல, அவை அமெரிக்க மக்களுக்கே சொந்தம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டம் முழுமையாக அரசியலமைப்புக்கு உட்பட்டதே என்றும் அவர் தீர்ப்பளித்தார்.
இந்த நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அதிபரின் உயர்மட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அதிபர் ஆவணங்கள் சட்டத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களைத் தனிப்பட்ட மொபைல் எண்களிலோ அல்லது தானாகவே அழியக்கூடிய (Ephemeral messaging) செயலிகளிலோ அனுப்பிவிட்டு, ஆவணங்களை அழிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் சங்கம் (AHA) மற்றும் ‘அமெரிக்கன் ஓவர்சைட்’ போன்ற கண்காணிப்பு அமைப்புகள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலேயே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தனது முந்தைய பதவிக்காலத்தின் முடிவில் பல ரகசிய ஆவணப் பெட்டிகளைத் தன் வசம் எடுத்துச் சென்ற சர்ச்சை நீடிக்கும் வேளையில், தற்போதைய இந்த நீதிமன்ற உத்தரவு டிரம்ப் நிர்வாகத்தின் ஆவண அழிப்பு முயற்சிக்கு விழுந்த மிகப்பெரிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.