Posted in

ருமேனியா குடியிருப்பு மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: ‘ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம்’ என நேட்டோ சூளுரை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் அண்டை நாடுகளுக்கும் ஆபத்தாக மாறி வரும் சூழலில், நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராக உள்ள ருமேனியா நாட்டின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ரஷ்யாவின் வெடிபொருட்கள் தாங்கிய ‘கெரான்-2’ (Shahed-136) ரக ட்ரோன் (ஆளில்லா விமானம்) மோதி வெடித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள கலாசி (Galați) நகரில் அமைந்துள்ள 10 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் கூரையில் நள்ளிரவில் இந்த ட்ரோன் விழுந்து வெடித்ததில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் உட்பட இருவர் காயமடைந்ததுடன், 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ருமேனியப் பகுதியில் ரஷ்ய ட்ரோன் விழுந்து பொதுமக்கள் காயமடைந்தது இதுவே முதல்முறை என்பதால், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ருமேனிய அதிபர் நிகுஷோர் டானுடன் அவசரத் தொலைபேசி ஆலோசனை நடத்தினார். பின்னர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட மார்க் ரூட்டே, “ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை நம் அனைவருக்கும் ஆபத்தானது. நேட்டோ படைகள் தங்களின் நட்பு நாடுகளின் எல்லைகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் (defend every inch) பாதுகாக்க முழுத் தயார் நிலையில் உள்ளன” என்று ரஷ்யாவிற்கு பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல் ருமேனியாவின் இறையாண்மையைக் கடுமையாக மீறும் செயல் என்று ருமேனிய அதிபர் நிகுஷோர் டான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், கருங்கடல் துறைமுக நகரான கான்ஸ்டான்டாவில் (Constanța) உள்ள ரஷ்ய தூதரகத்தை உடனடியாக மூடவும், ரஷ்ய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றவும் (expel) ருமேனியா உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வான்வெளியில் ரேடார் மூலம் இந்த ட்ரோன் கண்காணிக்கப்பட்ட போதிலும், குடியிருப்புப் பகுதிகள் அருகே இருந்ததாலும், வெறும் 4 நிமிடங்களே அது வான்வெளியில் இருந்ததாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று ருமேனிய ராணுவம் விளக்கமளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ரஷ்யா மீண்டும் ஒரு சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளது என்று சாடியுள்ளார். அத்துடன் ரஷ்யா மீது 21-வது கட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளார். உக்ரைன் போரின் உக்கிரம் நேட்டோ நாடுகளின் எல்லைகளுக்குள் ஊடுருவியுள்ள இந்தச் சம்பவம், கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே தீவிரப்படுத்தியுள்ளது.