தமிழக முதல்வராக விஜய் வந்த அதே நாளில் அவர் கையெழுத்திட்ட 3 திட்டங்களில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப் படையும் ஒன்று. அதன் ஆரம்ப நிகழ்வை நேற்றைய தினம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதனைத் திடீரென நிறுத்திவிட்டார் விஜய். அதே நேரத்தில், அன்றைய தினம் விஜய் அவர்கள் பட்டு வேட்டி சட்டையுடன் அவரது மேலாளர் மகனின் திருமண விழாவுக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இதனைப் பார்த்த பலருக்கும் லேசாக ஒரு நெருடல் ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த 10 நாட்களாகக் கடும் வெயிலில், சிங்கப் பெண் படையணிப் பெண்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வில் அவர்கள் விஜய்யைக் காணப் பெரும் ஆவலாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு சிறிய தப்பு கூட நடந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பெண்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பயிற்சிகளை எடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில், திடீரென எந்தவொரு காரணத்தையும் கூறாமல் இந்தச் சிங்கப் பெண் படை ஆரம்ப நிகழ்வு ரத்தாகியுள்ளது. மீண்டும் இந்த நிகழ்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவே இல்லை. இது மக்களிடையே தற்போது பேசுபொருளாக அமைந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எதுவும் பேசவில்லை, ஆனால் மக்கள் இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகிறார்கள்.
நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் விஜய் அவர்களுக்குத் தமது வாக்குகளைச் செலுத்தியிருந்தார்கள். பெண்களின் ஏகோபித்த ஆதரவு விஜய் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இந்த நிலையில் பெண்கள் படையணியை விஜய் கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, முதல்வர் விஜய் அவர்கள் இப்படியான முக்கிய நிகழ்வுகளை ரத்துச் செய்யும்போது மிகவும் அவதானமாக இருப்பது நல்லது என்ற விமர்சனங்களே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.