Posted in

“உன் வயசை தாண்டிதான் வந்துருக்கேன்!”: பணியிடத்தில் நக்கல் செய்த வாலிபரை வெளுத்து வாங்கிய அரசு அதிகாரி!

அரசுத் துறை சார்ந்த ஆய்வு ஒன்றின் போது, உரிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளை மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட வாலிபர் ஒருவரை, மூத்த அரசு அதிகாரி ஒருவர் நேருக்கு நேர் நின்று வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. வெடிபொருட்கள் அல்லது கட்டுமானப் பகுதி சார்ந்த ஆய்வின் போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அதிகாரியின் கேள்விகளுக்குப் பொறுப்பற்ற முறையிலும், நக்கலான தோரணையிலும் பதிலளித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட நபருக்கு அங்கேயே வைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணையின் போது ஒழுங்காக நிற்காமல், அதிகாரிகளை மதிக்காமல் பேசிய அந்த நபரைப் பார்த்து, “ஒழுங்கா நிக்க மாட்டீங்களா? தம்பி… உன் வயசையெல்லாம் தாண்டிதான் நான் இந்த இடத்துக்கு வந்துருக்கேன். உன்ன மாதிரி நான் எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்? இந்த மாதிரி எத்தனை பேர் என்கிட்ட வந்து நக்கலா நின்னுருப்பாங்க? அந்த நக்கல் புத்தியெல்லாம் இங்க வச்சுக்காதீங்க, அது இங்க வேகாது தம்பி” என்று அந்த அதிகாரி தனது கம்பீரமான குரலில் எச்சரித்துள்ளார். மேலும், அங்கிருந்த வெடிபொருள் சாதனம் (Detonator) தொடர்பான விவரங்களைப் படிக்குமாறு கூறி, அதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய சூழலில், அங்கிருந்த மற்றவர்கள் தலையிட முயன்றபோது, “சம்பந்தப்பட்டவங்க மட்டும் பேசுங்க, சும்மா சைலன்ட்டா போறவங்க எல்லாம் இந்த மாதிரி நக்கிங் வேலை எல்லாம் பண்ணக்கூடாது. இங்க நடக்குற எல்லா விஷயமும் சட்டப்படி ஒழுங்கா நடக்கணும்ன்றதுக்காகத்தான் நாங்க இங்க வந்துருக்குறோம்” என்று அதிகாரி கறாராகக் கூறினார். ஒரு அரசு அதிகாரி ஆய்வுக்கு வரும்போது அவரிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை விபரங்களைக் கற்றுக்கொள்ளுமாறு அந்த வாலிபருக்கு அவர் அறிவுறுத்தினார்.

“உங்களை யாரும் இங்க கெஞ்சச் சொல்லல; ஆனா, ஒரு அதிகாரி வராங்கன்னா மரியாதையா பேச முதல்ல கத்துக்கோங்க. உங்க அப்பா அம்மா உங்களுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்களா? உங்க பசங்களுக்கு இதையெல்லாம் நீங்க சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா?” என்று அந்த அதிகாரி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். பணியிடங்களில் அரசு அதிகாரிகளின் கடமைக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், உரியப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமலும் நக்கல் செய்யும் நபர்களுக்கு இந்த அதிகாரியின் அதிரடி அணுகுமுறை ஒரு தகுந்த பாடம் என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.