Posted in

மதிய உணவுக்கு வீட்டுக்கு போகாதீங்க: அரசு ஊழியர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனப் பணியாளர்கள் யாரும் மதிய உணவு நேரத்தின் போது தங்களது வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்று புதுச்சேரி அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர எரிபொருள் சிக்கன அழைப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சரத் சவுகான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் நேரடி உத்தரவின் பேரில், அரசு சார்புச் செயலாளர் முருகேசன் அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வாகனங்களைப் பயன்படுத்தி வீடுகளுக்குச் சென்று வருவதால் தேவையற்ற எரிபொருள் வீணாகிறது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்கள் அனைவரும் தங்களின் மதிய உணவை வீட்டிலிருந்தே அலுவலகத்திற்கு எடுத்து வந்து சாப்பிடுவதே நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பணிகளில் தொய்வில்லாமல் நேரமும் மிச்சமாகும் என அரசு நம்புகிறது.

இந்தச் சுற்றறிக்கையில் மதிய உணவுக்கான கட்டுப்பாடு மட்டுமின்றி, பல்வேறு அதிரடி மின்சார மற்றும் நிதிச் சிக்கன நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள், கல்விச் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டப் பயணங்களை அடுத்த 6 மாதங்களுக்கு முழுமையாக ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகள் தங்களின் வழக்கமான அலுவலகப் பயணங்களுக்கு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டும் என்றும், அலுவலகங்களுக்கு இடையேயான கூட்டங்களை நேரில் நடத்தாமல் காணொலிக் காட்சி (Video Conference) மூலமாக மட்டுமே நடத்த வேண்டும் என்றும் கறாராகக் கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சாரச் சேமிப்பு முறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வலியுறுத்தியுள்ள புதுச்சேரி அரசு, அதிகாரிகள் யாரும் இல்லாத நேரங்களில் விளக்குகள், குளிர்சாதன வசதிகள் (AC) மற்றும் கணினிகளை உடனடியாக அணைத்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தேவையற்ற அரசு வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருளைச் சேமிக்க அதிகாரிகள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்து கொள்ளும் (Vehicle Sharing) முறையை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவுகள் புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.