Posted in

லிங்க்ட்இன் உளவுவலை: போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் அரசு ரகசியங்களை வேட்டையாடும் சீன ஒற்றர்கள்!

லிங்க்ட்இன் (LinkedIn), இன்டீட் (Indeed) மற்றும் அப்வொர்க் (Upwork) போன்ற உலகின் முன்னணி தொழில்முறை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சீன ராணுவ உளவு அமைப்புகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய உளவு வலையை விரித்துள்ளதாகப் பாதுகாப்பு முகமைகள் எச்சரித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டு உளவு அமைப்பான ‘பைவ் ஐஸ்’ (Five Eyes), சீனா போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் தங்களின் அரசு மற்றும் ராணுவ ரகசியங்களை வேட்டையாடி வருவதாக அண்மையில் வெளியிட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு அறிக்கையில் அதிரடித் தகவல்களை உடைத்துள்ளது.

இந்த உளவு உத்தியின்படி, சீன ஒற்றர்கள் தங்களை சர்வதேச மனிதவள மேம்பாட்டு (HR) அதிகாரிகள் அல்லது தனியார் ஆலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் போலப் போலிப் பிம்பங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பின்னர், வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் (Foreign Policy Analyst) அல்லது பாதுகாப்புத் துறை ஆலோசகர் போன்ற கவர்ச்சிகரமான போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை ஆன்லைன் தளங்களில் வெளியிடுகின்றனர். இந்த விளம்பரங்களை நம்பி விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களின் சுயவிவரக் குறிப்புகளை (Resumes) ஆய்வு செய்து, அதில் யாருக்கு முக்கியமான அரசு ரகசியங்களை அணுகும் அதிகாரம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனியாகக் குறிவைக்கின்றனர்.

முதற்கட்டமாக, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆன்லைன் மூலம் நேர்காணல்களை நடத்தும் இந்த சீன ஏஜென்டுகள், தங்களின் உண்மையான அடையாளங்களை முற்றிலும் மறைத்துவிடுகின்றனர். பின்னர், ஒரு சிறிய சோதனைப் பணி எனக்கூறி, சீனாவின் இருதரப்பு உறவுகள் அல்லது ராணுவ உத்திகள் குறித்து பொதுவெளியில் இல்லாத சில முக்கியத் தகவல்களைக் கொண்ட அறிக்கைகளை (Trial Reports) எழுதக் கட்டாயப்படுத்துகின்றனர். இதற்காக ஆரம்பத்தில் சில நூறு டாலர்களைப் பேபால் (PayPal) அல்லது கிரிப்டோகரன்சி மூலம் வெகுமதியாக வழங்கி, மெதுவாக அவர்களைத் தங்களின் ரகசியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பின்னர், உரையாடல்களை என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பான செயலிகளுக்கு மாற்றி, பல்லாயிரம் டாலர்களை ஆசை காட்டி மிக முக்கியமான உத்தியோகப்பூர்வ ரகசியங்களைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ், அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள் ஆன்லைனில் வரும் இத்தகைய சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்பு அழைப்புகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சீன தூதரகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் புனையப்பட்ட ஒரு “அவதூறுப் பரப்புரை” என்று கூறியுள்ள சீனா, உலகிலேயே மிகப்பெரிய உளவு அமைப்பை வைத்துள்ள ‘பைவ் ஐஸ்’ நாடுகள்தான் சர்வதேச அமைதிக்கு உண்மையான அச்சுறுத்தல் என்று எதிர்விமர்சனம் செய்துள்ளது.