அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், ஜப்பானின் உலகப் புகழ்பெற்ற அனிமேஷன் கார்ட்டூன் கதாபாத்திரமான ‘நருடோ உசுமாகி’ (Naruto Uzumaki) போன்ற உடையில் இருப்பது போன்ற ஒரு ஏஐ (AI) வீடியோவை அண்மையில் வெளியிட்டார். ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் பதிவிட்ட இந்த வீடியோ, ஜப்பானிய அனிமேஷன் ரசிகர்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் விருப்பமான கதாபாத்திரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறி, டிரம்புக்கு எதிராக ஜப்பானில் ஆன்லைன் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜப்பானில் “ஜப்பானிய மங்காவை பாதுகாப்போம்” (Protect Japanese Manga) என்ற பெயரில் ‘Change.org’ இணையதளத்தில் ஆன்லைன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, டிரம்பின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் இதில் ஆன்லைனில் கையெழுத்திட்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். நருடோ போன்ற உலகளாவிய புகழ்பெற்ற கலைப்படைப்புகளை அதன் படைப்பாளர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது முற்றிலும் தவறானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
டிரம்பின் நிர்வாகம் இவ்வாறு ஜப்பானிய அனிமேஷன் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல் குறித்த ஒரு அதிகாரப்பூர்வ வீடியோவில், புகழ்பெற்ற ‘யு-கி-ஓ’ (Yu-Gi-Oh!) மற்றும் டிராகன் பால் போன்ற அனிமேஷன் காட்சிகளை வெள்ளை மாளிகை பயன்படுத்தியிருந்தது. அப்போது ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம், டோக்கியோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகி தங்களின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) மீறல் குறித்து அதிகாரப்பூர்வமாக முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தைரியம், நட்பு மற்றும் விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் உன்னதமான கலைப்படைப்புகளை, ராணுவ அல்லது அரசியல் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவது அதன் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக ஜப்பானிய அமைப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனிமேஷன் பதிப்புரிமை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானிய அரசிடம் இந்த எதிர்ப்பைக் கொண்டு சேர்க்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். உலகளவில் 25 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்ட நருடோ கதையின் மீதான இந்த அரசியல் தலையீடு தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.