Posted in

 இங்கிலாந்திற்குள் ஊடுருவும் ஈரானியப் படைகள்: அகதிகள் போர்வையில் இரகசிய ஏஜென்ட்கள்! 

ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகச் சிறிய படகுகளில் இங்கிலாந்திற்குள் நுழையும் சட்டவிரோத அகதிகளின் வழிகளைப் பயன்படுத்தி, ஈரான் அரசு தனது இரகசிய உளவுப் பிரிவு ஏஜென்ட்களை நாட்டிற்குள் ஊடுருவ வைத்து வருவதாக வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஈரானியக் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) ‘யூனிட் 700’ எனப்படும் சிறப்புப் பிரிவு, மனிதக் கடத்தல் கும்பல்களின் பிணையத்தைப் பயன்படுத்தி இந்த ஆபத்தான திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் வழியாக இயங்கும் மனிதக் கடத்தல் நெட்வொர்க்குகளின் சில பாதைகளை ஈரானிய அரசே நேரடியாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் தப்பியோடிய கடத்தல்காரர்கள் மற்றும் உளவுத்துறை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயுதங்கள் மற்றும் பணத்தைக் கடத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் பாதைகள் மூலம், தற்போது பயிற்சி பெற்ற ஏஜென்ட்களையும், இங்கிலாந்திற்குள் சென்று எதிர்காலத்தில் ஆபத்தான பணிகளைச் செய்ய ஒப்புக்கொண்ட நபர்களையும் அகதிகள் போர்வையில் லண்டன் வரை அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“லண்டனை பாதுகாப்பற்றதாக மாற்ற எங்களுக்கு ஏவுகணைகள் தேவையில்லை; எங்களின் ஆட்கள் ஏற்கனவே லண்டனில் தயாராகக் காத்திருக்கிறார்கள்” என்று ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கும் வகையில் கூறியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் டவுனிங் ஸ்திரீட்டில் உள்ள பிரதமர் இல்லம் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களைக் கூட தங்களால் இலக்கு வைக்க முடியும் என்று ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் பிரிட்டிஷ் உளவு அமைப்பான MI5-ன் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இருப்பினும், இங்கிலாந்திற்குள் ஈரானால் உண்மையிலேயே இவ்வளவு பெரிய உளவு நெட்வொர்க்கை நிறுவ முடியுமா என்பது குறித்துப் பிரிட்டிஷ் பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தை அச்சுறுத்தவும், அமெரிக்காவுடனான அந்நாட்டின் கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தவும் ஈரான் இதுபோன்ற போலி பிரசாரங்களை மேற்கொள்கிறதா அல்லது இது நிஜமான அச்சுறுத்தலா என்பது குறித்து இங்கிலாந்து உளவு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.