Posted in

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் ; அமெரிக்காவிடம் பணம்கேட்டு ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடுமையான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் அரசு ஒரு புதிய அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது. அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களது நாட்டின் 24 பில்லியன் டாலர் (சுமார் £20 பில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். இந்த நிதியை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று ஈரான் திட்டவட்டமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளது.

ஈரானின் இந்த நிபந்தனைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஈரானின் இந்த கோரிக்கையை முற்றிலும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று நிராகரித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தை மிகவும் “பரிதாபகரமானது” (Pathetic regime) என்று சாடியுள்ளார். மேலும், ஈரான் உடனடியாக அமைதி உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் அதன் வாழ்வாதாரமாக இருக்கும் கார்க் தீவு (Kharg Island) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையை உலுக்கியுள்ள இந்த மோதலில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி கடல்வழிப் போக்குவரத்தை முடக்கியுள்ளது. இதனால் உலகளாவிய எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்நாட்டிலும் கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயலும் ஈரான், அமெரிக்கா தங்களது நிதியை விடுவிக்கத் தவறினால் இந்தப் போரை செங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வரை விரிவுபடுத்தி அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைத் தாக்குவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் பேச முயன்று வரும் வேளையில், இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு இறுதி உடன்பாடு எட்டப்படலாம் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்ற டிரம்பின் நிபந்தனையையும், அமெரிக்கா ஈரானின் நிதியை விடுவிக்க வேண்டும் என்ற ஈரானின் பிடிவாதமும் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டையாக நீடிக்கிறது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் மூன்றாம் உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.