ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிக்கு வருகை தந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜு, தங்களது நீண்ட நாள் குறைகளைக் கேட்பதற்கு காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட்டதாக லாந்தை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
லாந்தை கிராம மக்கள் தங்கள் பகுதியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, சீரான பஸ் வசதி இல்லாமை மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிலவி வரும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகளை அமைச்சரிடம் நேரில் மனுவாக அளிக்க நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். பெண்கள் தங்கள் கைகளில் காலிக்குடங்களுடன் வீதியில் திரண்டு நின்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஆயத்தமாகியிருந்தனர்.
அமைச்சர் வரும் வழியில் காத்திருந்த பொதுமக்கள், அவரது காரைப் பார்த்ததும் தங்களின் கோரிக்கைகளைச் சொல்வதற்காக கைகளைக் காட்டி நிறுத்த முயன்றனர் . ஆனால், மக்களின் கைகாட்டலையும் எதிர்பார்ப்பையும் பொருட்படுத்தாமல் அமைச்சரின் கார் நிற்காமல் அதிவேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது . இதனால் ஏமாற்றமடைந்த மக்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குக் கேட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள், வெற்றி பெற்ற பிறகு தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடக் கேட்க மறுப்பதாகக் கூறி கொதித்தெழுந்தனர் .
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்மணி பேசுகையில், தங்களுக்கு காலையிலும் மாலையிலும் முறையான பஸ் வசதி வேண்டும் என்றும், காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் . மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் கண் பதிவு (Eye Scanner Verification) செய்வதில் உள்ள குளறுபடிகளால் பலருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, தினமும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளதாகவும், இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அமைச்சர் தங்களைக் கண்டுகொள்ளாமல் சென்றது வேதனையளிப்பதாகத் தெரிவித்தார் .

