131 நாட்களுக்குப் பின் அயதுல்லா அலி கமேனி உடல் அடக்கம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு ஊடகம்!

131 நாட்களுக்குப் பின் அயதுல்லா அலி கமேனி உடல் அடக்கம்; அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு ஊடகம்!

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் டெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் (Mashhad) உடல் அடக்கம் செய்யப்படுவதோடு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரானில் உள்ள அவரது குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்லாமிய முறைப்படி ஒருவர் இறந்த 24 மணி நேரத்திற்குள் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், அமெரிக்க-இஸ்ரேல் படைகளுடன் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் கடுமையான ராணுவ அச்சுறுத்தல்கள் காரணமாக, கமேனி இறந்து 131 நாட்களுக்குப் பிறகு தற்போது இந்த இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள முறைப்படியான அட்டவணையின்படி, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டெஹ்ரானில் விடைபெறும் நிகழ்வுகளும், ஜூலை 6 அன்று தலைநகரில் இறுதி ஊர்வலமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜூலை 7 அன்று புனித நகரான கோமில் (Qom) சிறப்பு வழிபாடுகளும், இறுதியாக ஜூலை 9 அன்று மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா (Imam Reza Shrine) ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வுகளில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது 56 வயது மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த இறுதிச்சடங்கு அறிவிப்பானது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்த கட்டமைப்பு எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கும் வேளையில் வெளியாகியுள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.