Posted in

காலை 6 மணிக்குள் காலி: 2 லிட்டர் குறைவாகக் கிடைக்கும் ஆவின் பால்—பூத் பூத்தாக அலைந்து தவிக்கும் முகவர்கள்!

சென்னை உட்படத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் சீராக இல்லாமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிகாலை வேளையிலேயே வழக்கமாக வரும் பால் வரத்து தாமதமாவதோடு, வழக்கமாக விநியோகிக்கப்படும் அளவை விடக் குறைவாகவே பால் முகவர்களுக்கு வழங்கப்படுவதால், காலை 6 மணிக்குள் பால் முகவரியகங்கள் (Booths) மற்றும் கடைகளில் பால் முழுமையாகக் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் பால் வாங்கும் முகவர்களுக்கு தங்களின் தேவைக்கேற்ப 2 லிட்டர் முதல் பல க்ரேட்டுகள் வரை குறைவாகவே ஆவின் நிர்வாகம் விநியோகித்து வருவதாக முகவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், பால் கார்டுதாரர்களுக்கே முழுமையாகப் பால் வழங்க முடியாமல், கூடுதல் தேவைக்காக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பூத் பூத்தாக அலைந்து திரிந்து ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் திடீர் பால் தட்டுப்பாட்டுக்கு ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் பால் கொள்முதல் குறைந்ததே முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் விலை வழங்கி கொள்முதல் செய்வதால், அரசுக்கு வரும் பாலின் அளவு சரிந்துள்ளதாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் வழக்கமாக ஆவின் பாலை நம்பியிருக்கும் பொதுமக்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாகப் புகார்கள் வலுத்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி சென்னை நந்தனத்தில் உள்ள ‘ஆவின் இல்லத்தில்’ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பால் கொள்முதலை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கான நிலுவைத் தொகையை விரைவாக வழங்கி பால் தட்டுப்பாட்டை உடனடியாகச் சீர் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.