Posted in

அஜித் ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’: திடீரென அரசியல் களத்தில் குதித்தது ஏன்? பின்னணி என்ன?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தான் எந்த அரசியலிலும் ஈடுபடப்போவதில்லை என்றும், ரசிகர் மன்றங்களை அதிகாரப்பூர்வமாகக் கலைப்பதாகவும் முன்பே அறிவித்திருந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் ஒன்றிணைந்த அவரது ரசிகர்கள் ‘தமிழக மக்கள் கழகம்’ (தமக) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, மஞ்சள், வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் இரு சிறுத்தைகள் பொறிக்கப்பட்ட கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் எந்தக் கட்சியையும் சாராதவர் எனத் தெளிவாகக் கூறியிருந்த போதிலும், ரசிகர்கள் திடீரெனக் கட்சித் தொடங்கும் முடிவை எடுத்ததன் பின்னணியில் சுவாரசியமான காரணங்கள் பேசப்படுகின்றன. திரைத்துறையில் விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருந்தாலும், விஜய் அரசியல் களத்தில் இறங்கி ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கிய சூழலில், அஜித்தின் ரசிகர் பலத்தை மற்றொரு கட்சிக்குத் தாரைவார்க்கக் கூடாது என்றும், தங்கள் நாயகனுக்கெனத் தனித்துவமான அரசியல் தளம் தேவை என்றும் கருதியே ரசிகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், 38 மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும் ஒருங்கிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ‘பொதுச்செயலாளர்’ பதவியை அஜித்துக்காகவே ஒதுக்கி அழைப்பு விடுத்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். “நாங்கள் அஜித் சாருடைய அனுமதியைப் பெற்று இக்கட்சியைத் தொடங்கவில்லை; ரசிகர்களாகவே முன்வந்து சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற மக்கள் பணிகளுக்காக இக்கட்சியை உருவாக்கியுள்ளோம்” எனத் தெளிவாக விளக்கமளித்துள்ளனர்.

அஜித் பெயரைப் பயன்படுத்தி வேறு யாரும் தவறான வழியில் கட்சிகள் தொடங்குவதைத் தடுக்கவும், அஜித் ரசிகர்களின் வாக்கு வங்கியை ஒரே அமைப்பின்கீழ் திரட்டவுமே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவதை விரும்பாத நடிகர் அஜித், இந்த புதிய கட்சி அறிவிப்பு குறித்து என்ன விதமான அறிக்கையை வெளியிடப்போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.