Posted in

அஜித்தை வெளுக்கும் ரசிகர்கள்… செல்ஃபிக்கு இப்படி முறைப்பதா?

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் (Silverstone Circuit) நடைபெற்ற சர்வதேசக் கார் பந்தயத்தின் போது, தன்னுடனும் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை நடிகர் அஜித்குமார் கோபத்துடன் முறைத்துப் பார்த்துப் புறக்கணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே கடும் கண்டனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் நடைபெற்ற ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ பந்தயத்தில் பங்கேற்ற அஜித்தைக் காண்பதற்காக ஏராளமான தமிழ் ரசிகர்கள் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் கூடியிருந்தனர். போட்டி நிறைவடைந்ததும் நடைபாதையில் நடந்து சென்ற அஜித்திடம், ரசிகர் ஒருவர் ஆர்வத்துடன் மொபைல் போனை நீட்டி செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் எரிச்சலடைந்த அஜித், இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்த ரசிகரைச் சில நொடிகள் கோபமாக முறைத்துப் பார்த்தார். பாதுகாப்பு அதிகாரி தலையிட்டு ரசிகரை விலக்கிய பிறகும், அஜித் அவரைத் தொடர்ந்து முறைத்துக்கொண்டே சென்ற காட்சி இணையத்தில் வெளியாகிப் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, “30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து தங்களை அரியணையில் அமர்த்திய ரசிகர்களிடம் இவ்வளவு கோபமும் அலட்சியமும் காட்டுவதா?” எனக் கூறிப் பலரும் அஜித்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “ஃபார்முலா-1 சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் கூடத் தனது ரசிகர்களிடம் இப்படி நடந்து கொள்வதில்லை; ஹாமில்டனை விட பெரிய வீரரா நீங்க?” என்று நெட்டிசன்கள் அஜித்தின் அணுகுமுறையை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், அஜித்தின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். “பாதுகாக்கப்பட்ட மற்றும் ஆபத்தான கார் பந்தயப் பகுதியில் வீரர்கள் கவனச்சிதறல் அடையக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகவுமே அவர் அவ்வாறு நடந்துகொண்டார்” என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். லண்டனில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து நட்பு பாராட்டிய அஜித்தின் வீடியோ வைரலான அதே வேளையில், ரசிகரிடம் காட்டிய இந்தக் கோபமான ரியாக்ஷன் இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.