பயங்கரவாதி ஒசாமா பின் லேடனைப் புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் இஸ்லாமிய மதபோதகர் ஹஃபிஸ் முகமது தாஹிர் மெஹ்மூத் அஷ்ரஃபிக்கு வழங்கப்பட்ட ‘சமய நல்லிணக்க விருதை’ இங்கிலாந்து திருச்சபையின் முதல் பெண் கேன்டர்பரி பேராயரான டேம் சாரா முல்லாலி (Dame Sarah Mullally) அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளார். செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளில் இவ்விருது வழங்கப்பட்டதற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உலமா கவுன்சிலின் தலைவரான அஷ்ரஃபிக்கு, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ மக்களைப் பாதுகாத்ததற்காக ‘ஹூபர்ட் வால்டர்’ சமய நல்லிணக்க விருது கடந்த வாரம் லண்டனில் உள்ள லேம்பேத் அரண்மனையில் வைத்து வழங்கப்பட்டது. இருப்பினும், 2007-ஆம் ஆண்டு ஊடகச் சந்திப்பு ஒன்றில் பேசிய அஷ்ரஃபி, 9/11 தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனை “இஸ்லாத்திற்காகப் போராடியவர்” என்றும், அவருக்கு ‘சைஃபுல்லா’ (கடவுளின் வாள்) என்ற பட்டத்தை அளிப்பதாகவும் பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
9/11 பயங்கரவாதத் தாக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததன் நினைவு நாளில், பின் லேடனைப் போற்றிய ஒருவருக்கு இங்கிலாந்து திருச்சபை விருது வழங்கியது “அருவருப்பானது மற்றும் பதிக்கப்பட்ட குடும்பங்களை அவமதிக்கும் செயல்” என்று தேசிய மதச்சார்பற்ற சங்கம் (NSS) கடும் கண்டனம் தெரிவித்தது. பொதுமக்களின் எதிர்ப்பும் சர்வதேச விமர்சனங்களும் அதிகரித்ததைத் தொடர்ந்து, லேம்பேத் அரண்மனை நிர்வாகம் அஷ்ரஃபிக்கு அளிக்கப்பட்ட விருதை உடனடியாகத் ரத்து செய்வதாக அறிவித்தது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய அஷ்ரஃபி, “தனது 2007-ஆம் ஆண்டு பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டன் அரசு பட்டம் வழங்கியதால் எழுந்த அதிருப்தியையே தான் வெளிப்படுத்தியதாகவும்” கூறித் தன் மீதான விமர்சனங்களை மறுத்துள்ளார். இருப்பினும், உரியத் தகுதியாராய்ச்சி இல்லாமல் விருது வழங்கியதற்காக இங்கிலாந்து திருச்சபை நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.